ALAM SEKITAR & CUACANATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு தொடர்பில் 53 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

செமினி, டிச 20- பத்தாங் காலி அருகே உள்ள கோதோங் ஜெயா ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகப் போலீசார் 53 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அந்த தங்கும் முகாமின் நடத்துநர் மற்றும் இரு ஊழியர்கள் தவிர்த்து இந்த பேரிடரில் உயிர்த்தப்பியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

இந்த விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் சிலர் அழைக்கப்படுவர் என்று இன்று இங்கு செமினி போலீஸ் நிலையத்தைத் திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நோக்கமின்றி மரணம் விளைவித்ததற்காகக் குற்றவியல் சட்டத்தின் 304ஏ
பிரிவு, பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதற்காகத் தண்டனைச் சட்டத்தின் 290வது பிரிவு, விவசாய நிலத்தில் அனுமதியின்றி தங்கும் முகாம் நடத்தியதற்காக 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் 107வது பிரிவின் ஆகியவற்றின் கீழ் அந்த நிலச்சரிவு சம்பவம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பேரிடர் தொடர்பான விபரங்களைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவதற்காகச் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிறப்பு குழு ஒன்றை தாங்கள் அமைத்துள்ளதாகவும் அர்ஜூனைடி சொன்னார்.

போலீஸ் உதவி ஆணையர் (ஏசிபி) தலைமையில் எண்மர் கொண்ட குழு இங்கு ஷிப்ட் முறையில் அங்கு பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.42 மணியளவில் நிகழ்ந்த அந்த நிலச்சரிவில் அங்குள்ள கூடாரங்களில் தங்கியிருந்த 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 24 பேர் உயிரிழந்தது இதுவரை உறுதி
செய்யப்பட்ட வேளையில் மேலும் 61 பேர் உயிர்த்தப்பினர்.


Pengarang :