ALAM SEKITAR & CUACANATIONAL

15 துயர் துடைப்பு மையங்களிலும் வெள்ளம்- பாதிக்கப்பட்ட 1,641 பேர் வேறு இடங்களுக்கு மாற்றம்

பெர்மைசூரி, டிச 20- திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காகத் திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் 15 நிவாரண மையங்களில் தங்கியிருந்த 1,641 பேர் வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கெமாமானில் இரு துயர் துடைப்பு மையங்களும் உலு திரங்கானு மற்றும்
பெசுட்டில் தலா ஐந்து மையங்களும் செத்தியுவில் மூன்று மையங்களும்
வெள்ளத்தில் மூழ்கியதாக திரங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ரோஹாய்மி முகமது ஈசா கூறினார்.

மாநிலத்தில் மோசமடைந்து வரும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட
இத்தகைய எதிர்பாராதச் சூழல் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதில்
அமலாக்கத் தரப்பினருக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அவர்
சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதில் கால தாமதம் ஏற்படும் என்பதால் பொறுமை காக்கும்படி பொதுமக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இடம் மாற்றும் பணிகளை நாங்கள் விரைவாகவும் மிகுந்த கவனத்துடனும் மேற்கொண்டு வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள மங்கோக் தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் துயர்
துடைப்பு மையத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

ஒரு சில இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான
கனரகத் தளவாடங்கள் இல்லாதது மற்றும் இதுவரை பாதிக்கப்படாத
இடங்களிலும் இம்முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது, நிலைமையை மேலும்
சிக்கலாக்கியுள்ளது என்றார் அவர்

இதனைக் கருத்தில் கொண்டு கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,
கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் உள்ள இடங்களுக்கு மீட்புப் பணியில்
முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :