SELANGOR

பூச்சோங் பெர்மாயில் சட்டவிரோத அங்காடி கடைகளுக்கு எதிராக எம்.பி.எஸ்.ஜே. நடவடிக்கை

சுபாங் ஜெயா, டிச 21- பூச்சோங், ஜாலான் தக்வா, புலாத்தான் பூச்சோங் பெர்மாய் சாலையோரம் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நடத்தப்படும் அங்காடிக் கடைகளுக்கு எதிராக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நேற்று நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையில் மாநகர் மன்றத்தின் 200 அமலாக்கப் பிரிவு உறுப்பினர்களோடு பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம், காவல் துறை, தெனாகா நேஷனல் மற்றும் ஆயர் சிலாங்கூர் ஆகிய தரப்பினரும் பங்கு கொண்டதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

சம்பந்தப்பட்ட அந்த இடம் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொருத்தமாக இல்லாதது, வர்த்தக அனுமதி விதிகள் மீறப்பட்டது, சாலை ரிசர்வ் நிலத்தில் கட்டுமானங்களை நிறுவியது ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு அந்த அங்காடிக் கடைகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்ததார்.

இது தவிர, லைசென்ஸ் விதிமுறைகளுக்குப் புறம்பான முறையில் நிரந்தரக் கட்டுமானங்களை எழுப்பியது, வியாபாரப் பொருள்களை அங்கேயே வைத்திருந்தது, வாடிக்கையாளர்களுக்காக மேசை, நாற்காலிகளை வைத்தது, சுத்தத்தைப் பேணாதது உள்ளிட்ட குற்றங்களையும் வணிகர்கள் புரிந்துள்ளது கண்டறியப்பட்டது என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வியாபார மையத்தினால் ஏற்பட்ட இடைஞ்சல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பில் பொது மக்களிமிருந்து கிடைத்தப் புகார்களும் கருத்தில் கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றம் கூறியது.

அங்காடிக் கடைகள் அகற்றப்பட்டப் பின்னர் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாய் சுற்றுவட்டச் சாலை மற்றும் ஜாலான் தக்வா ஆகியவற்றை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்நோக்கத்திற்காக ஜாலான் தக்வா முதல் புலாத்தான் பூச்சோங் பெர்மாய் வரையிலான பகுதி மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.


Pengarang :