ALAM SEKITAR & CUACANATIONAL

பகாங், திரங்கானுவில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு- கிளந்தானில் நிலைமை சீரடைகிறது

கோலாலம்பூர், டிச 22- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, பகாங்
மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிளந்தானில் வெள்ளம்
தணிந்து வரும் நிலையில் ஜோகூர் மற்றும் பேராக்கில் நிலைமையில்
எந்த மாற்றமும் இல்லை.

திரங்கானு மாநிலத்தில் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு 30,009ஆக இருந்த
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 36,231
பேராக அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு
செயலகம் கூறியது.

பகாங் மாநிலத்தில் குவாந்தான், சுங்கை உலார் தேசியப் பள்ளியில் உள்ள
தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை இன்று
காலை 35 பேராக அதிகரித்ததாக மாநில வெள்ள பேரிடர் மேலாண்மை
செயல்குழு தெரிவித்தது.

கிளந்தான் மாநிலத்தைப் பொறுத்த வரை இன்று காலை மொத்தம் உள்ள
119 துயர் துடைப்பு மையங்களில் 30,115 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த எண்ணிக்கை 30,551ஆக இருந்தது.

ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் உள்ள இரு துயர் துடைப்பு
மையங்களில் 48 பேர் தங்கியுள்ள வேளையில் கம்போ பத்து பாடாக்கில்
34 பேரும் கம்போங் தாசேக் சமூக மண்டபத்தில் 14 பேரும் அடைக்கலம்
நாடியுள்ளனர்.

பேரா மாநிலத்தின் பாகான் டத்தோவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர்
சுங்கை தியாங் டாராட் தேசியப் பள்ளியிலுள்ள துயர் துடைப்பு மையத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :