ECONOMYNATIONAL

ஆடம்பர நிகழ்வுகள் வேண்டாம், அமைச்சர்களுக்குப் புதிய பாத்தேக் சட்டையும் வேண்டாம்- பிரதமர் வலியுறுத்து

புத்ராஜெயா, டிச 23- வீண் செலவினத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக
நிகழ்ச்சிகளைப் பெரிய அளவில் நடத்துவதையும் ஒவ்வொரு நிகழ்விலும்
அமைச்சர்களுக்காகப் புதிய பாத்தேக் சட்டைகளை வாங்குவதையும்
தவிர்க்கும்படி அரசாங்கத் துறைகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய நடைமுறைகள் நிறுத்தப்பட்டால் அவற்றுக்கு உண்டாகும்
செலவுத் தொகையை உதவித் தேவைப்படுவோருக்கு வழங்க முடியும்
என்று அவர் சொன்னார்.

அனைத்து அரசு துறைகளும் வீண் செலவினத்தைக் குறைக்க வேண்டும்.
பெரிய அளவிலும் கோலாகலமாகவும் விழாக்களை நடத்துவதை அவை
தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

சில துறைகள் நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களை நடத்தும் ஒவ்வொரு
முறையும் புதிய உடைகளை, புதியப் பாத்தேக் சட்டைகளை வாங்குகின்றன.
ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்கின்றன. அத்தகைய
நடைமுறைகளை நாம் இனி நிறுத்தவிருக்கிறோம் என அவர் மேலும்
தெரிவித்தார்.

நேற்று இங்கு 2022ஆம் ஆண்டிற்கான தேசிய நிலையிலான அங்காடி
மற்றும் சிறு வணிகர்கள் மாநாட்டை தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சில நிகழ்ச்சிகளுக்குப் புதிய உடைகளை வாங்க வேண்டிய அவசியம்
ஏற்பட்டால் அவை கீழ்நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் வகையில்
ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என அன்வார் ஆலோசனை வழங்கினார்.

உடைகளைக் கொடுப்பதாக இருந்தால் அவற்றை ஏழைகளுக்கு, கீழ் நிலை
ஊழியர்கள் அல்லது பி40 தரப்பினருக்குக் கொடுப்போம். எனக்கோ,
அமைச்சர்களுக்கோ அல்லது அமைச்சின் தலைமைச் செயலாளருக்கோ
கொடுக்க வேண்டாம் என்றார் அவர்.

இது பார்ப்பதற்குச் சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், நாட்டில்
இருக்கக்கூடிய பெரிய அளவிலான வசதி குறைந்தத் தரப்பினருக்கு இது
பெரும் பலனைத் தரும்.

நான் மெர்டிசடிஸ் காரை நிராகரித்தது, சம்பளம் வேண்டாம் என்றது
போன்றவற்றை சிறிய விஷயம் என்று சிலர் கூறலாம். ஆனால்,
இத்தகைய சிறிய விஷயங்கள் நிறுத்தப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும்
பணத்தை ஏழைகளுக்கு திருப்பிக் கொடுக்க இயலும் என்று அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :