SELANGOR

“அனிஸ்“ பாலர் பள்ளிகளில் அடுத்தாண்டு கூடுதல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், டிச 27- “அனிஸ்“ எனப்படும் சிலாங்கூர் பிரத்தியேகப்
பிள்ளைகளுக்கான சிறப்பு பாலர் பள்ளிகளில் கூடுதல் கவனம்
தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அடுத்தாண்டு கல்வித்
தவணையின் போது 40ஆக அதிகரிக்கப்படும்.

நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஐந்து மற்றும் ஆறு வயதுடைய
அந்த மாணவர்கள் கல்வித் திறனுகேற்ப இங்குள்ள செக்சன் 7, துணைக்
கல்வி மையத்தில் சேர்க்கப்படுவர் என அதன் துறைத் தலைவர் டேனியல்
அல் ரஷிட் கூறினார்.

இந்த மையத்தில் தற்போது 14 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் மாணவர் சேர்ப்பு
நடவடிக்கைக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை உயர்வு காணும் என்று அவர்
சொன்னார்

இந்த மையத்தில் பயில்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த மாணவர்களின்
வளர்ச்சி நிலையைக் கண்டறிவதற்காக இம்மாத தொடக்கம் முதல்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சோதனைகள் நடத்தப்பட்டன என்றார்
அவர்.

இந்த மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியமைச்சினால்
நிர்ணயிக்கப்பட்ட போதனை முறை பயன்படுத்தப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.

இந்த மையத்தில் பயிலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலத்தில்
அம்மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நாங்கள் அணுக்கமாக
கண்காணித்து வருவோம். அதன் பின்னர் அவர்கள் வழக்கமான பள்ளியில்
கல்வியைத் தொடர்வர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :