NATIONAL

தாக்கப்பட்டதாக நம்பப்படும் நான்கு வயது சிறுவன் மரணம்

ஜோகூர் பாரு, டிசம்பர் 27: தாக்கப்பட்டதாக நம்பப்படும் நான்கு வயது சிறுவன் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் (HSI) நேற்று பிற்பகல் இறந்தான்.

ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் கூறுகையில், மாலை 6.45 மணியளவில் பத்து பஹாட் செங்கராங்கில் உள்ள தனது சகோதரியின் நண்பரின் வீட்டில் மயக்கமடைந்த தாகச் சொல்லப்பட்ட அச்சிறுவன் டிசம்பர் 23 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான்.

“அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.40 மணியளவில் இறந்தார்.

இன்று காலை பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக அச்சிறுவனின் பெற்றோர் இருவரும் சிறையில் அடைக்கப் பட்ட பின்னர், சிறுவன் அவரது 19 வயது சகோதரி கவனித்துக் கொண்டார், பின்னர் அச்சிறுவன் சகோதரியின் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என கமருல் ஜமான் கூறினார்.

சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, சிறுவனின் சகோதரி மற்றும் அவரது கணவர் உட்பட இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், கைபேசி சார்ஜர்கள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள், 29 அங்குல இரும்பு கம்பிகள், கோட் ஹேங்கர்கள், மின்விசிறி கவர் வலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் தூக்கும் இரும்பு கம்பிகள் உட்பட அச்சிறுவனைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பந்தப்பட்ட அனைவரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) முதல் சனிக்கிழமை (டிசம்பர் 31) வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப் பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, பாதிக்கப்பட்டோரின் மரணத்தைத் தொடர்ந்து தண்டனைச் சட்டப்பிரிவு 302யின் கீழ் கொலை வழக்காக மறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :