SELANGOR

தாமான் எங் ஆனில் சுமார் RM381,000 செலவில் விளையாட்டு மைதானம் ஒன்று தற்காலிக வெள்ள நீர்ப்பிடிப்பு குளமாக மாற்றியமைக்கப்படுகிறது

ஷா ஆலம், டிச 27: பண்டார் பாரு கிள்ளானில் உள்ள தாமான் எங் ஆன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினையை சமாளிக்க, சுமார் RM381,000 செலவில் விளையாட்டு மைதானம் ஒன்றை தற்காலிக வெள்ள நீர்ப்பிடிப்புக் குளமாக மாற்றி வெள்ளத் தணிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (MPK) கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் நோர்பிசா மஹ்ஃபிஸ் கூறுகையில், ஜாலான் செரிண்டிட் 9, தாமான் எங் ஆனில் மேற்கொள்ளப்படும் திட்டமானது கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கப் பட்டு ஆறு மாதங்களுக்குள் அதாவது ஜூன் 21, 2023 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“தற்காலிக நீர்ப்பிடிப்பு குளம் 3000 மீ 3 கொள்ளளவு கொண்ட நீரை தேக்கி வைக்க முடியும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நோர்பிசாவின் கூற்றுப்படி, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஒப்பந்ததாரர் பூங்காவில் உள்ள மரங்களை வெட்டி, இங்குள்ள விளையாட்டு உபகரணங்களை அகற்ற வேண்டும். பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் மீண்டும் அவற்றை நிறுவ வேண்டும்.

பண்டார் பாரு கிள்ளான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், கிள்ளான் முனிசிபல் கவுன்சில் உறுப்பினர் மற்றும் பொறியியல் இயக்குனருமான ஜம்ரி ஓத்மானுடன் களப் பகுதியை பார்வையிட்டார்.


Pengarang :