NATIONAL

சீனாவில் கோவிட்-19 அதிகரிப்பால் நோய்த் தொற்று உயர்வு காணும் அபாயம்- தயார் நிலையில் சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், டிச 27- சீனாவில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல்
அண்மைய காலமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நோய்த்
தொற்று மற்றும் அதன் தொடர்பான மரணச் சம்பவங்களின் உயர்வை
எதிர் கொள்ள சுகாதார அமைச்சு தயார் நிலையில் உள்ளது.

நோய்த் தொற்று பரவல் மற்றும் மரண எண்ணிக்கை அதிகரிப்பை
தடுப்தற்காக ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களின்
எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தலைமைச்
செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மலேசியர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உயர்ந்த பட்சப்
பாதுகாப்பை பெறுவதற்கு ஏதுவாக தகுதி உள்ள தரப்பினர் விரைந்து
ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்
கொள்கிறது என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை உலகச்
சுகாதார நிறுவனம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் தெரிவித்திருந்தது.

நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டு இதன் காரணமாக சுற்றுலா மற்றும்
பொருளாதாரத் துறைகள் சுறுசுறுப்படைந்துள்ள காரணத்தால் இந்த
நோய்த் தொற்று அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு மலேசியாவுக்கு
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என நோர் ஹிஷாம் சொன்னார்.

சுகாதார மேலாண்மையை இலக்கவியல்மயமாக்கியதன் மூலம் சுகாதார
அமைச்சு கோவிட்-19 நிர்வாக முறையை வலுப்படுத்தியுள்ளது. இதன்
வாயிலாக நோய்க்கான அறிகுறியைக் கண்டுபிடிப்பது, சோதிப்பது,
நோய்க்கான மூலத்தை கண்டறிவது, தனிமைப்படுத்துவது, ஆதரவளிப்பது
ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறையை அது தானியங்கி
முறைப்படுத்தியுள்ளது.


Pengarang :