NATIONALSELANGOR

சிலாங்கூர் அரசின் வெ.500,000 வெள்ள உதவி நிதியை மந்திரி புசார் கிளந்தான் அரசிடம் ஒப்படைத்தார்

கோத்தா பாரு, டிச 27- அண்மையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட
கிளந்தான் மாநிலத்திற்கு சிலாங்கூர் அரசு வழங்குவதாக
வாக்குறுதியளித்த 500,000 வெள்ளித் தொகையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி இன்று ஒப்படைத்தார்.

இந்த உதவி நிதி ஏற்கனவே கிளந்தான் மாநில அரசின் வங்கிக் கணக்கில்
சேர்க்கப்பட்டு விட்ட நிலையில் அந்நிதியை வழங்குவதற்கான
அடையாளமாக மாதிரி காசோலையை அவர் கிளந்தான் மந்திரி புசாரிடம்
வழங்கினார்.

இன்று கிளந்தான் மந்திரி புசார் டத்தோ அகமது யாக்கோப்பின்
அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வருகை புரிந்த போது அமிருடின் இந்த
மாதிரி காசோலையை அவரிடம் ஒப்படைத்தார். கிளந்தான் துணை மந்திரி
புசார் டத்தோ முகமது அமார் நிக் அப்துல்லாவும் அப்போது
உடனிருந்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல் இன்று கிளந்தான் மந்திரி
புசாரிடம் வெள்ள நிவாரண நிதியை (மாதிரி காசோலை) ஒப்படைதோம்
என்று அமிருடின் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை
வழங்குவதில் இந்த நிதி மாநில அரசுக்குத் துணை புரியும் எனத் தாம்
நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிதியைக் கொண்டு மாநில மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்ற
திட்டத்தைக் கிளந்தான் அரசு கொண்டிருக்கும் எனத் தாம் நம்புவதாகவும்
அவர் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய
மாநிலங்களுக்கு மாநில அரசின் சார்பில் 10 லட்சம் வெள்ளி நிதியுதவி
வழங்கப்படும் என்று அமிருடின் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி
கூறியிருந்தார்.


Pengarang :