ALAM SEKITAR & CUACANATIONAL

பேராக்கில் வெள்ளம் தணிகிறது- நான்கு மாநிலங்களின் நிலைமையில் மாற்றமில்லை

கோலாலம்பூர், டிச 28- பேராக் மாநிலத்தில் வெள்ளம் தணிந்து வரும் நிலையில் அம்மாநிலத்தில் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனினும், கிளந்தான், திரங்கானு, சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் வெள்ள நிவாரண மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.

பேராக் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் இன்னும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக மாநில வெள்ளப் பேரிடர் மேலாண்மை செயல்குழு தெரிவித்தது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 42 பேராக இருந்ததாக அது கூறியது.

கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் மாவட்டத்திலுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் இன்று காலை 12 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர்  தங்கியிருந்ததாக வெள்ளப் பேரிடர் தகவல் அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரங்கானு மாநிலத்தின் பெசுட் மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் ஒரு துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நீண்ட காலமாக அவர்கள் இங்கு தங்கியுள்ளனர்.

சரவா மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி கம்போங் லுத்தோங் துயர் துடைப்பு மையத்தில் எழு பேர்  அடைக்கலம் நாடியுள்ளனர்.

சபா மாநிலத்தின் கோத்தா பெலுட் மாவட்டத்தில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 135 பேர் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். இதனிடையே இம்மாநிலத்தில் கடல் பெருக்கு காரணமாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1,454 ஆக உள்ளது.


Pengarang :