இளம் தலைமுறையின் எதிர்காலத்திற்கு அடித்தளமாக விளங்கும் கல்வியை அரசியலாக்காதீர்- மந்திரி புசார்

ஷா ஆலம், டிச 30- இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு
அடித்தளமாக விளங்கும் கல்வியை குறிப்பாக பல இன மற்றும்
சமயத்தினர் வாழும் சிலாங்கூரில் அரசியலாக்க வேண்டாம் என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

சிலாங்கூரில் உள்ள சீன இடைநிலைப்பள்ளிகளுக்கான உதவ மாநில அரசு
எண்ணம் கொண்டுள்ளதாக தாம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில்
பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில்
சர்ச்சைக்குரிய கருத்துகளை சில தரப்பினர் வெளியிட்டு வருவது
தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

தற்போது சிலாங்கூரில் நான்கு தனியார் சீன இடைநிலைப் பள்ளிகள்
மட்டும் உள்ளதாகவும் அவை யாவும் கிள்ளானில் அமைந்துள்ளதாகவும்
அமிருடின் சொன்னார்.

தனியார் சீன இடைநிலைப்பள்ளிகளுக்கான தேவை சீன சமூகத்தில்
ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அதற்கான நிலத்தை அடையாளம்
காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வாறு நிலம்
கிடைக்கும் பட்சத்தில் கிள்ளானுக்கு வெளியே அவர்கள் சொந்தமாக
இடைநிலைப் பள்ளியை நிர்மாணித்து கொள்ளலாம் என்றும் அவர்
தெரிவித்தார்.

கிள்ளானுக்கு வெளியே புதிய பள்ளி அமையும் பட்சத்தில் அந்த ஐந்தாவது
சீன இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில்வதற்குரிய வாய்ப்பு
கிட்டும். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என
இன்று காலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில் அவர் கூறினார்.

மாநிலத்தில் அனைத்துலக பள்ளிகள் உள்பட பல தனியார் பள்ளிகள்
செயல்படுவதோடு கோம்பாக்கில் அல்-அமின் பள்ளி மற்றும் செத்தியபுடி
பள்ளி போன்றவையும் இயங்கி வருவதை அமிருடின் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டில் மாநிலத்திலுள்ள அனைத்து மொழிப் பள்ளிகளுக்கும்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு 2 கோடியே 65
லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது.

அவற்றில் 50 லட்சம் வெள்ளி மாநிலத்தில் உள்ள 98 தமிழ்ப்பள்ளிகளின்
மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Pengarang :