SELANGOR

அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கிவிட்டு நாட்டை மேம்படுத்த ஒன்றுபடுவீர்- சுல்தான்  வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 1- சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மீட்சியின் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பின் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் கைகோர்க்குமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்  பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அனைத்துத் தரப்பினரும் அரசியல் சித்தாந்தங்களை  ஒதுக்கி வைத்தால் இந்த இலக்கினை அடைய முடியும் என்று சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

இனி எந்தக் தரப்பினரும்  குறிப்பாக அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தனிப்பட்ட நலன்களில் மட்டுமே கவனம் செலுத்தி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பொறுப்புகளைப் புறக்கணிப்பதை மேன்மை தங்கிய சுல்தான் விரும்பவில்லை.

இந்தப் புத்தாண்டில் மக்கள் தொடர்ந்து அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்ப்பார்கள் என்றும் மேன்மை தங்கிய சுல்தான் நம்புகிறார் என்று  முகநூலில் வெளியிட்ட புத்தாண்டு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் ஷராபுடீன் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி  நோராஷிகின் ஆகியோரும் 2023 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனைத்து மக்களுக்கும் குறிப்பாக சிலாங்கூர்வாசிகளுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

2023 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் புதிய, பிரகாசமான ஒளியைக் கொண்டுவர  இறைவனை  சுல்தான் தம்பதியர் பிரார்த்திப்பதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pengarang :