SELANGOR

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தில் 23 உறுப்பினர்கள் பதவியேற்பு

சுபாங் ஜெயா, ஜன 5- எட்டு புது முகங்கள் உள்ளிட்ட 23 பேர் 2023ஆம்
ஆண்டிற்கான சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர்களாக இன்று
பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த 23 பேரும் மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி
அனுவார் முன்னிலையில் 1972ஆம் ஆண்டு இரகசிய காப்பு பிரமாணம்
மற்றும் பதவி உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்த பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய டத்தோ பண்டார், இந்த
ஓராண்டு காலத் தவணைக்கு நியமிக்கப்பட் உறுப்பினர்களில் 17.3
விழுக்காட்டினர் பெண்கள் என்றும் மற்றவர்கள் ஆண்கள் என்றும்
கூறினார்.

புதியவர்கள் மற்றும் பழையவர்களை உள்ளடக்கிய இந்த கூட்டணியின்
வாயிலாக மாநகரின் தொலைநோக்கு மற்றும் பணி இலக்கை அடைய
முடியும் என்பதோடு 2020-2025 சுபாங் ஜெயா வியூகத் திட்டத்தையும்
நனவாக்க இயலும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு உறுப்பினரிடமும் இருக்கும் அனுபவம் அனைத்துலகத்
தரத்திலான நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்குரிய கொள்கைகளை
வகுக்க உதவும் என்பதோடு சேவைத் தரத்தை மேம்படுத்தும்
முயற்சிகளுக்கு அனைவரும் ஒன்றணைந்து தோள் கொடுக்கவும் இயலும்
என அவர் குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் 1976ஆம் ஆண்டு ஊராட்சி
மன்றச் சட்டங்களுக்கு (சட்டம் 171) கட்டுப்பட்டவர்கள் என்பதோடு
இழைக்கப்படும் குற்றங்களுக்கு 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச்
சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு ஆளாக
நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :