SELANGOR

ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானம் முதல் காலாண்டில் தொடங்கும்

பெட்டாலிங் ஜெயா, ஜன 6- ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின்
(கே.எஸ்.எஸ்.ஏ.) மறுநிர்மாணிப்புப் பணிகள் இவ்வாண்டின் முதல்
காலாண்டில் தொடங்கும்.

அந்த கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான திட்டமிடல்
அனுமதிக்காகத் தாங்கள் காத்திருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டம் தொடர்பில் நாங்கள் பல கூட்டங்களை நடத்தியுள்ளோம்.
அனைத்து ஏற்பாடுகளும் ஏறக்குறைய தயாராகி விட்டன. திட்டமிடல்
அனுமதி கிடைப்பது மட்டும் இன்னும் எஞ்சியுள்ளது. அதன் பின்னர்
இத்திட்டத்திற்கான செலவு இறுதி செய்யப்படும் என்றார் அவர்.

இங்குள்ள கோல்ப் ஸ்ரீ சிலாங்கூர் கிளப்பில் நேற்று நடைபெற்ற 2023ஆம்
ஆண்டிற்கான அனைத்துலக ஜூனியர் கோல்ப் போட்டி தொடர்பான
செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரங்கம் அமைந்துள்ள இடத்தில் நிலத்தை கைமாற்றிக் கொள்ளும்
நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட மாட்டோம். அந்த பகுதி அரங்கம், பொது
வசதிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கான இடமாகத்
தொடர்ந்து விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அரங்கம் எல்ஆர்டி3 இரயில் தடத் திட்ட நிர்மாணிப்புக்கு
இணையான காலக்கட்டத்தில் பூர்த்தியாகும் என அமிருடின் கடந்தாண்டு
ஜூலை மாதம் 15ஆம் தேதி கூறியிருந்தார்.

மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்ரேஷன் பெர்ஹாட் நிறுவனத்துடன் அரசாங்க-
தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கு
அரசாங்க நிதி பயன்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

வெள்ளத்தை தடுப்பதற்கு ஏதுவாக அரங்க வளாகத்தின் தரைப் பகுதியை
1.5 மீட்டர் அளவுக்கு உயர்த்துவது, மின் இணைப்புகளை சீரமைப்பது ஆகிய பணிகளை இந்த விளையாட்டரங்க மறு சீரமைப்புத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.

தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வகையில் புல் திடல், செயற்கை
திடல் மற்றும் காங்கீரிட் தரை ஆகிய மூன்று வகை திடல் வசதிகளை
இந்த அரங்கம் கொண்டிருக்கும்.


Pengarang :