SELANGOR

இவ்வாண்டில் வருமானத்தை 10 விழுக்காடு அதிகரிக்க எம்.பி.எஸ்.ஜே. இலக்கு

சுபாங் ஜெயா, ஜன 6- இவ்வாண்டில் வருமானத்தை 10.7 விழுக்காடு
அதிகரித்து 31.5 கோடி வெள்ளியாகப் பதிவு செய்ய சுபாங் ஜெயா மாநகர்
மன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் மூலம் இவ்வாண்டில் கூடுதலாக 3 கோடியே 4 லட்சம் வெள்ளியை
வருமானமாக ஈட்ட முடியும் எனத் தாங்கள் நம்புவதாக மாநகர் மன்ற
டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

கடந்தாண்டு 28 கோடியே 50 லட்சம் வெள்ளியை மாநகர் மன்றம்
வருமானமாக ஈட்டியதாக நேற்று இங்கு நடைபெற்ற 2023ஆம்
தவணைக்கான மாநகர் மன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுக்கு
தலைமையற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் இவ்வாண்டிற்கான உத்தேச வரவு
செலவுத் திட்டம் முதலாவது சிலாங்கூர் திட்டம் மற்றும் 2020-2025 சுபாங்
ஜெயா வியூக செயல்திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த
வரவு செலவுத் திட்டம் வருமானத்திற்குச் சமமான செலவினத்தையும்
உள்ளடக்கியதாக இருக்கும் என்றார் அவர்.

இதனிடையே, பண்டார் புத்ரா பெர்மாய் அருகே உள்ள லெஸ்தாரி
பெர்டானாவில் ஏற்பட்ட நில அமிழ்வு குறித்து கருத்துரைத்த அவர், அங்கு
மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் வரும் மே மாதம் 7ஆம்
தேதியுடன் முற்றுப் பெறும் என்றார்.

மொத்தம் 95 லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த
சீரமைப்பு பணி தற்போது 55 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :