NATIONAL

மனநோயாளியைக் கொலை செய்ததாக வங்காளதேசச் சமையல்காரர் மீது குற்றச்சாட்டு

கோல குபு பாரு, ஜன 6- இங்குள்ள புக்கிட் பெருந்தோங்கில் செயல்படும்
மனநல ஆரோக்கியப் பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த மனநோயாளி
ஒருவரை படுகொலை செய்ததாக வங்காளதேசச் சமையல்காரர் மீது
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் புக்கிட்
பெருந்தோங், ஜாலான் செம்பாக்கா 2இல் உள்ள அந்த பராமரிப்பு
மையத்தில் லியோங் காம் மிங் (வயது 52) என்ற ஆடவரை படுகொலை
செய்த குற்றச்சாட்டை முகமது அப்துல் அலிம் (வயது 33) என்ற அந்த
சமையல்காரர் எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க
வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு
எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் சித்தி ஃபத்திமா தாலிப் முன்னிலையில் வாசிக்கப்பட்ட
தம் மீதான குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக முகமது
தலையை அசைத்தார். கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார
வரப்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்படவில்லை.

இதனிடையே, எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாமல்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து வசித்து வந்தாகக் கொண்டு
வரப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் மறுத்து விசாரணை
கோரினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்க அனுமதி மறுத்த நீதிமன்றம்
இந்த வழக்கின் அடுத்த விசாரணையைப் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்தி
வைத்தது.

அரசுத் தரப்பில் துணைப் பப்ளிக் புரோசிகியூட்டர் அஸ்மா ஜாம்ரி வழக்கை
நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது சார்பில் யாரும்
ஆஜராகவில்லை.


Pengarang :