NATIONAL

பந்திங்கில் கார் மோதியதில் 24 வயது ஆடவர் உயிரிழந்தார்

ஷா ஆலம், ஜன 6: நேற்று அதிகாலை ஜாலான் கிளாங்-பந்திங்-கோலாலம்பூர், பந்திங், கிலோமீட்டர் (கி.மீ.) 23 ல் கார் மோதியதில் இந்தியர் ஒருவர் இறந்தார்.

அதிகாலை 1.10 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில், ராமகிருஷ்ணன் அரவிந்த் (24) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

22 வயதான உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற கார், கிள்ளாங்கில் இருந்து பந்திங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் பாதிக்கப்பட்டவர் சாலையைக் கடக்க முயன்ற போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப் பட்டுள்ளது என கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அஹ்மட் ரித்வான் முகமட் நார் @ சலே கூறினார்.

“கார் மோதி , காரின் முன் கண்ணாடியில் பட்டு தூக்கி எறியப்பட்ட நபர், விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்சூரன்ஸ் ஏஜென்டாகப் பணிபுரியும் கார் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தடயவியல் பிரிவு, பந்திங் மருத்துவமனையில் உடலை அடையாளம் காணும் செயல் முறைக்காக இறந்தவரின் உறவினர்கள் அல்லது அவரைப் பற்றி தெரிந்தவர்களையோ தேடி வருவதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 யின் பிரிவு 41 (1)இன் கீழ் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அஹ்மத் ரித்வான் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது இன்ஸ்பெக்டர் கெய்ஷா நூர் அசேலியா பித்தி சரனையோ 011-62622972 அல்லது 03-31872222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :