NATIONAL

அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு- வெ.38 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

ஜாசின் ஜன 6- இம்மாதம் 4ஆம் தேதி சிலாங்கூர் மற்றும் மலாக்காவில்
போலீசார் நடத்திய தொடர் அதிரடிச் சோதனைகளில் அனைத்துலகப்
போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதோடு 38 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள ஷாபு போதைப் பொருள் மற்றும் எக்ஸ்டசி போதை
மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கைகளில் இரு பெண்கள் உள்ளிட்ட எட்டு
உள்நாட்டினர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ்
தலைவர் டத்தோ ஜைனோல் சமா கூறினார்.

இருப்பத்தைந்து முதல் 48 வயது வரையிலான அந்த சந்தேகப்
பேர்வழிகளில் ஒரு தம்பதியரும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

கடந்த 4ஆம் தேதி மாலை 3.00 மணியளவில் ஜாசின், சர்க்காமில்
மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனையில் வீடு ஒன்றின் அருகே
காரில் இருந்த இரு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண்மணி கைது
செய்யப்பட்டனர் என்ற அவர் சொன்னார்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு ஆணும் பெண்ணும்
கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்து 82.53 கிலோ ஷாபு, 16.62 கிலோ
எக்ஸ்டசி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று இன்று இங்கு
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மலாக்கா மற்றும் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு போலீசார்
கூட்டாக மலாக்கா மாநிலத்தின் பெர்மாத்தாங் செராய் மற்றும் கம்போங்
புலாயிலும் சிலாங்கூர் மாநிலத்தின் டாமன்சாராவிலும் மேற்கொண்ட
சோதனைகளில் மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்
அவர்.

இந்த கும்பல் கடந்தாண்டு முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர்,
கைது செய்யப்பட்டவர்களில் சில மீனவர்களும் அடங்குவர் என்றார்.


Pengarang :