NATIONAL

மக்காவ் மோசடி- விரிவுரையாளர் 13 லட்சம் வெள்ளியை இழந்தார்

ஜொகூர் பாரு, ஜன 9- மக்காவ் மோசடிக் கும்பலின் அச்சுறுத்தலுக்கு
ஆளான இஸ்கந்தார் புத்ரி பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தனது
சேமிப்புத் தொகையான 13 லட்சம் வெள்ளியை இழந்தார்.

சுகாதார அமைச்சின் பணியாளர் எனக் கூறிக் கொண்ட நபரிடமிருந்து
வந்த அழைப்பைத் தொடர்ந்து அக்கும்பலின் மோசடி வலையில் 41
வயதுடைய அந்த பெண் விரிவுரையாளர் சிக்கியதாக ஜொகூர் மாநிலப்
போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஜமான் மாமாட் கூறினார்.

சுகாதார அமைச்சின் பணியாளர் எனக் கூறிக்கொண்ட அந்த நபர், சபாவில்
பணியாற்றிய போது போலி கோவிட்-19 அறிக்கையை அந்த
விரிவுரையாளர் தயாரித்தாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தொலைபேசி தொடர்பை மற்றொருவருக்கு அந்நபர் மாற்றி விட, சபா மாநிலப் போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட புதிய நபர்,
சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மற்றும் போதைப் பொருள் கடத்தலில்
அந்த விரிவுரையாளர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயந்து போன அந்த விரிவுரையாளர் தம்மீதான குற்றச்சாட்டுகளை
மறுத்துள்ளார். அந்த நபர் இதன் தொடர்பான விசாரணை முடியும் வரை
பணம் தங்கள் பாதுகாப்பில் இருப்பதற்காகப் புதிதாக வங்கிக் கணக்கைத்
திறந்து அதில் தனது சேமிப்புத் தொகையைச் சேர்க்கும்படி
உத்தரவிட்டுள்ளார்.

எனினும், தாம் புதிய கணக்கில் சேர்த்த பணம் யாவும் வேறு வங்கிக்
கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த
விரிவுரையாளர் இது குறித்து போலீசில் புகார் செய்தார் என்று நேற்று
இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ கமாருள் ஜமான்
கூறினார்.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தித்ன 420 பிரிவின்
கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும்
தெரிவித்தார்.


Pengarang :