NATIONAL

கால்பந்து போட்டிகளில் வி.ஏ.ஆர். தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பில் விரைவில் அறிவிப்பு

பாங்கி, ஜன 9 - நாட்டின் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ உதவி 
நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து மலேசிய கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று அதன் தலைவர் டத்தோ ஹமிடின் முகமது அமின் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பத்தை அமலாக்குவது தொடர்பில் தாங்கள் மலேசிய கால்பந்து லீக்குடன் (எம்.எஃப்.எல்)   கடந்த ஆண்டு இறுதியிலிருந்து  திட்டமிடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த தொழில்நுட்பம் குறித்து இந்த ஆண்டு அறிவிப்பை வெளியிடுவோம். ஆனால் இது முழுமையாகப் பயன்படுத்தப்படாது. எடுத்துக்காட்டாக, எஃப்.ஏ. கிண்ணம் மற்றும் 
மலேசியக் கிண்ண அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்று போன்ற சில போட்டிகளுக்கு 
மட்டுமே இது பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனினும், அதிக செலவுகளை உள்ளடக்கியதால் லீக் போட்டிகளில் இந்த தொழில்நுட்பம்  பயன்படுத்தப்படாது. இருந்த போதிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் எஃப் ஏ.எம். மற்றும் எம்.எஃப்.எல். உறுதியாக உள்ளது  என்று அவர்  குறிப்பிட்டார்.

நேற்று இரவு இங்கு நடைபெற்ற ஹரியான் மெட்ரோ விளையாட்டுச் சாதனையாளர் 
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

இந்த தொழில்நுட்பத்தை   எஃப்.ஏ. கிண்ணம் மற்றும் மலேசிய கிண்ணங்களை உள்ளடக்கிய 2023 எஃப்.ஏ. லீக்கில்  பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ள தாங்கள் 
திட்டமிட்டுள்ளதாக எஃப்.ஏ.எம். முன்னதாக கூறியிருந்தது.

Pengarang :