SELANGOR

இலவசப் பஸ் சேவை பயன்படுத்தும் அந்நிய நாட்டினரிடமிருந்து வெ.392,000 வசூல்

ஷா ஆலம், ஜன 9- சிலாங்கூர் அரசின் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ்
சேவையைப் பயன்படுத்திய அந்நிய நாட்டினரிடமிருந்து 392,000 வெள்ளி
கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நடைமுறை
அமல்படுத்தப்படதிலிருந்து இதுவரை இந்த தொகை வசூலிக்கப்பட்டதாக
ஊராட்சி மன்றங்கள் மற்றும் பொது போக்குவரத்து துறைக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

தற்போது ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையை அந்நிய நாட்டினர்
பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு 90 காசு கட்டணம்
விதிக்கப்படுவதாக அவர் அவரை மேற்கோள் காட்டி சினார் ஹரியான்
செய்தி வெளியிட்டுள்ளது.

மாதம் ஒன்றுக்கு சராசரி 25,500 அந்நிய நாட்டினர் ஸ்மார்ட் சிலாங்கூர்
பஸ் சேவையைப் பயன்படுத்துவதை தரவுகள் காட்டுவதாக இங் ஸீ
ஹான் குறிப்பிட்டார்.

தற்போது, மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்த 44
தடங்களில் 140 ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு
வருவதாகவும் தெரிவித்தார்.

அந்நிய நாட்டினருக்கு விதிக்கப்படும் 90 காசு கட்டணத்தை
உயர்த்துவதற்கு மாநில அரசு தற்போதைக்கு திட்டமிடவில்லை என்றும்
அவர் சொன்னார்.

இதர பொது போக்குவரத்து சேவைகளிலும் மருத்துவமனைகளிலும்
அந்நிய நாட்டினருக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. ஆகவே இந்த 90 காசு
கட்டணத்தை அவர்களுக்கு எதிரான பாகுபாடாக கருத முடியாது என்றார்
அவர்.

நாட்டு மக்கள் குறிப்பாக சிலாங்கூர் வாசிகள் ஸ்மார்ட் சிலாங்கூர்
உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதை

ஊக்குவிப்பதே மாநில அரசின் தலையாய குறிக்கோளாகும் எனவும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :