NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் மலை சாலையில் உள்ள தடுப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்களைச் சிலாங்கூர் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது

அம்பாங் ஜெயா, ஜன 10: கடந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று நிகழ்ந்த பத்தாங் காலி நிலச்சரிவைத் தொடர்ந்து பத்தாங் காலி-கெந்திங் மலை பிரிவு 14 வழித்தடத்தில் உள்ள தடுப்பை வலுப்படுத்துவதற்கான பல திட்டங்களைச் சிலாங்கூர் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

உள்கட்டமைப்பு எஸ்கோ இர் இஷாம் அசிம் கூறுகையில், சம்பந்தப்பட்ட பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

“சரிந்த தடுப்பை வலுப்படுத்த பல திட்டங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். சிலர் மலையை வெட்டி, புதியதாகத் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என்கின்றனர்.

“அந்த ஆலோசனைகள் அனைத்தையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம், விரைவில் முடிவெடுப்போம்,” என்று அவர் நேற்று தாமான் புக்கிட் பெர்மாய் 2 இல் நிலச்சரிவு சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

டிசம்பர் 16 முதல் மூடப்பட்ட அப்பாதை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது, ஆனால் அதிகாரிகள் ஒரு பாதை மட்டுமே தற்போது திறந்துள்ளனர்.

மேலும் கருத்து தெரிவித்த இர் இஷாம், இந்தச் சாலை திறக்கப்பட்டதன் மூலம் சுற்றுலா மையத்தில் பணிபுரிந்த  சிலாங்கூரைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் பயணிக்க வசதியாக இருந்தது என்றார்.


Pengarang :