விபத்துக்குள்ளான கார் தீப்பற்றியதில் இருவர் கருகி மாண்டனர்- தெமர்லோவில் சம்பவம்

குவாந்தான், ஜன 15- மண் லோரியுடன் ஏற்பட்ட விபத்தில் கார் ஒன்று தீப்பற்றியதில் அக்காரில் பயணம் செய்த இருவர் கருகி மாண்டனர். இத்துயரச் சம்பவம் ஜெராண்டூட்- தெமர்லோ சாலையின் 28வது கிலோ மீட்டரில் கம்போங் டத்தோ ஷாரிப் அகமது அருகே நேற்று காலை நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் காலை 10.45 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸார் முகமது யூசுப் கூறினார்.

இந்த விபத்தில் பலியான கார் ஓட்டுநரை அடையாளம் காணும் முயற்சியில் தங்கள் ஈடுபட்டுள்ள வேளையில் அதில் பயணித்தவர் கெடா, சிக் மாவட்டத்தின் கம்போங் பினாங்கைச் சேர்ந்த 35 வயது நபர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தெமர்லோவிலிருந்து ஜெராண்டூட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த கார் இரட்டைக் கோடுகள் கொண்ட இடத்தில் வாகனம் ஒன்றை முந்த முயன்ற வேளையில் எதிரே வந்த லோரியுடன் மோதுண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மோதலின் எதிரொலியாக 20 முதல் 30 மீட்டர் தொலைக்கு இழுத்துச் செல்லப்பட்ட கார் திடீரென தீப்பற்றியது. காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட காரணத்தால் ஓட்டுநர் மற்றும் பயணியால் தப்ப முடியாமல் போனது என்றார் அவர்.

இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர்த்தப்பியதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :