2029ஆம் ஆண்டிற்குள் நான்கு மாநகர்களை உட்படுத்திய பெருநகரை உருவாக்க சிலாங்கூர் இலக்கு

சுபாங் ஜெயா, ஜன 16- அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் நான்கு மாநகரங்களை உள்ளடக்கிய பெருநகரை உருவாக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது.

சுபாங் ஜெயா,பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மாநகர்களோடு விரைவில் மாநகரமாக பிரகடனப்படுத்தப்படவிருக்கும் கிள்ளானையும் இணைப்பதன் மூலம் இந்த பெரு நகரத் திட்டத்தை அமல்படுத்த முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்னும் ஒரிரு ஆண்டுகளில் கிள்ளானும் மாநகர் அந்தஸ்தைப் பெற்றுவிடும். அதன் பின்னர் ஒன்றோடோன்று இணைக்கப்பட்ட நான்கு மநாகரங்களை சிலாங்கூர் கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் நிர்வாக ரீதியாகவும் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கக்கூடிய சமத்துவமான நிலையை உருவாக்க முடியும் என அவர் சொன்னார்.

பெருநகரமாக ஆவதற்கு மக்கள் தொகை மற்றும் சில அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். ஆனால், கற்பனை ரீதியாகப் பார்த்தால் பெருநகரமாக ஆவதற்கு தேவையான இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து விட முடியும் என்றார் அவர்.

சன்வே ரிசோர்ட் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் வைப்ரண்ட் சமூக விருதளிப்பு மற்றும் வைப்ரண்ட் சமூக மானியத் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும், கிள்ளான் நகரின் 30 விழுக்காட்டுப் பகுதி இன்னும் கிராமப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் மாநகர் அந்தஸ்தைப் பெறுவதற்கு தடையாக உள்ள இத்தகைய சவால்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் சமாளித்தாக வேண்டும் என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.

கிராமங்களை உள்ளடக்கியிருக்கும் பட்சத்தில் மாநகராக ஆக முடியாது என்பது இதன் பொருளல்ல. உதாரணத்தற்கு சுபாங் ஜெயாவில்கூட கம்போங் தெங்கா, கம்போங் புக்கிட் லஞ்சோங், கம்போங் ஸ்ரீ அமான் என பல இடங்கள் உள்ளன. எனினும் அவை திட்டமிடப்பட்ட மேம்பாட்டு அளவைக் கொண்டுள்ளன என்றார் அவர்.

 


Pengarang :