NATIONAL

பெருநாள்கால உச்சவரம்பு விலைத் திட்டத்தைப் பின்பற்றுவீர்- வணிகர்களுக்கு அமைச்சு நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜன 17- சீனப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று தொடங்கி
இம்மாதம் 29ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பெருநாள் கால
உச்சவரம்பு விலைத் திட்டத்தைப் பின்பற்றி நடக்கும்படி வணிகர்களுக்கு
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின் அமைச்ச
நினைவுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் வணிகர்களுக்குத் தாங்கள் கடும் எச்சரிக்கையை
விடுக்க விரும்பவில்லை என்றும் மாறாக, பயனீட்டாளர்கள் உள்பட
அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வணிகர்கள் வர்த்தக
நெறியை முறையாகக் கடைபிடிப்பார்கள் என்றும் தாங்கள் நம்புவதாகவும்
அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.

எனினும், விதிமீறல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமைச்சு விட்டுக்
கொடுக்கும் போக்கை கடைபிடிக்கும் என்பது இதன் பொருளல்ல.
அமைச்சின் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவதன் மூலம் அனைத்துத்
தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும் என
அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள மிட்வேலி, ஏயோன் பிக் பேராங்காடியில் பொருள்களின்
விலையை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
சொன்னார்.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு எட்டு வகையான உணவுப் பொருள்கள்
விலைக்கட்டுப்படுத்தப்பட்டவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்
சொன்னார்.

பெருநாள் காலத்தில் தேவையற்ற வீண் விரயங்களைத் தவிர்ப்பதற்கு
ஏதுவாக அவசியமான உணவுப் பொருள்களை மட்டும் வாங்கும்படி பொது
மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :