SELANGOR

ஷா ஆலம்  விளையாட்டரங்க நிர்மாணிப்பு மீதான கண்காட்சி இம்மாத இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், ஜன. 18- புதிய ஷா ஆலம் விளையாட்டரங்க நிர்மாணிப்பு குறித்த பொதுக் கண்காட்சி இம்மாத இறுதியில் இங்கு நடைபெறும் என்று மந்திரி புசார் 
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

கண்காட்சியின் மூலம் அரங்கின் மாதிரி வடிவமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் 
அதன் அம்சங்கள் குறித்து பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என்று அவர் சொன்னார்.

இந்த மாத இறுதியில் அல்லது சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு 
நாங்கள் ஒரு பொது கண்காட்சியை நடத்துவோம். அந்தக் கண்காட்சி நடைபெறும் 
இடம் பின்னர் அறிவிக்கப்படும். அது பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய பகுதியில் 
இருக்க வேண்டும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில்  சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டை (செல்ஹாக்) தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த அரங்கை கட்டுவதற்குப் பொறுப்பான தரப்பிடம் ஒப்புதல் பெறுவதற்காக 
திட்டமிடல் அங்கீகார விண்ணப்பத்தை அனுப்பும் பணியில் தமது அலுவலகம் தற்போது ஈடுபட்டு வருவதாக அமிருடின் கூறினார்.

இந்த அரங்கின் கட்டுமானத்திற்கான முன்னேற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று 
வருகின்றன.
எங்கள் இலக்குபடி ஜனவரி முதல் ஏப்ரல்  வரையிலான முதல் காலாண்டில் 
கட்டுமானத்தின் ஒரு பகுதியைத்  தொடங்கலாம் என்று அவர் கூறினார்.

பல்வேறு விளையாட்டு வசதிகளை உள்ளடக்கிய ஷா ஆலம் விளையாட்டரங்கை 78 கோடியே 70  லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கும் பொறுப்பை எம்.ஆர்.சி.பி. நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது.

Pengarang :