NATIONAL

மாற்றுத் திறனாளிகள், மாணவர்களுக்கு இலவச சேவை- போக்குவரத்து அமைச்சு-கே.டி.எம்.பி. பேச்சுவார்த்தை

சிரம்பான், ஜன 19- பொது போக்குவரத்து சேவையில் குறிப்பாக
இரயில்களில் மாற்று திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு இலவசச்
சேவையை வழங்குவது தொடர்பில் கெரோத்தாப்பி தானா மிலாயு
பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) நிறுவனத்துடன் போக்குவரத்து அமைச்சு
விரைவில் பேச்சு நடத்தவுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் நோக்கிலான
இந்த இலவச போக்குவரத்து சேவைத் திட்டத்தை அமல்படுத்துவது
தொடர்பில் அமைச்சு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக அதன் அமைச்சர்
டத்தோஸ்ரீ அந்தோணி லோக் கூறினார்.

மக்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் அரசாங்கம் வழங்கி வரும்
மானியத்தை இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினருக்கு குறிப்பாக இரயில்
சேவையைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகள் மற்றும்
மாணவர்களுக்கு பயன்படுத்தும்படி கே.டி.எம்.பி. நிறுவனம்
அறிவுறுத்தப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் கிழக்கு கரை, கிள்ளான்
பள்ளத்தாக்கு மற்றும் வட பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும்
மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை அமல்படுத்தும்படி
சம்பந்தப்பட்டத் தரப்பினரை குறிப்பாக கே.டி.எம்.பி. மற்றும் பிரசாரானா
மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தினரை நான் கேட்டுக் கொண்டேன்
என்றார் அவர்.

உதாரணத்திற்கு நெகிரி செம்பிலான் முதல் தஞ்சோங் மாலிம் வரையிலும்
பாடாங் ரெங்காஸ் முதல் அலோர் ஸ்டார் வரையிலும் பயணிகள் இரயில்
சேவையும் கிழக்கு கரை மாநிலங்களுக்கு இரயில் சேவையும் உள்ளன.
இதனை மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். இத்தரப்பினருக்கு எவ்வாறு
கட்டணச் சலுகை வழங்குவது என்பது குறித்து சீனப்புத்தாண்டிற்கு பிறகு
அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள சுங் ஹூவா சீனப்பள்ளியில் இன்று நடைபெற்ற சீன
எழுத்தோவியம் வரையும் போட்டி நிகழ்வுக்கு வருகை புரிந்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :