ALAM SEKITAR & CUACAYB ACTIVITIES

புக்கிட் அந்தாராபங்சா மலைச்சாரல் ஆய்வு விபரங்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ள அரசு பரிசீலனை- ரோட்சியா தகவல்

அம்பாங் ஜெயா, ஜன 20- புக்கிட் அந்தாராபங்சா மலைச்சாரலின் நடப்பு நிலை தொடர்பான புதிய ஆய்வின் முடிவுகளில் அடங்கியுள்ள சில அம்சங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

அப்பகுதியின் பாதுகாப்பு குறித்தும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த பரிந்துரை முன்வைக்கப்படுவதாக அம்பாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (யு.டி.எம்.) மற்றும் இக்ராம் எனப்படும் மலேசிய பொதுப்பணி கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ஆவணப்படுத்தப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

அந்த ஆவணம் அதிகாரத்துவ இரகசிய சட்டத்திற்கு (ஓ.எஸ்.ஏ.) உட்பட்டது என்பதால் அதன் உள்ளடக்கத்தை இங்கு வெளியிட முடியாது. தவிர, அந்த ஆவணத்தை நான் இன்னும் படிக்கவில்லை. எனினும், பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய சில அம்சங்கள் அந்த ஆவணத்தில் இருக்கக்கூடும் என கருதுகிறேன் என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் மக்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். நிலச்சரிவு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் வேளையில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எதுவும் தெரியாத நிலையில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தை மாநில அரசின் கவனத்திற்கு நான் கொண்டுச் செல்லவுள்ளேன் என்று அவர் சொன்னார்.

அம்பாங் மலைச்சாரல் மேலாண்மை தொடர்பில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக, இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுஸி முகமது யாத்திம்,  மலைச்சாரல் ஆய்வு தொடர்பான சில விஷயங்களை மாநில அரசு பொது மக்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்தார்.

 


Pengarang :