NATIONAL

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜன 26- நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும்  கனமழையைத் தொடர்ந்து ஜொகூர், சபா மற்றும் பகாங் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் 
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.

ஜோகூரில், கோத்தா திங்கி, குளுவாங், சிகாமாட், மெர்சிங், பத்து பஹாட் மற்றும் மூவார் ஆகிய மாவட்டங்களுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழாவது மாவட்டமாக பொந்தியான்  சேர்ந்துள்ளது.
 
மாநிலத்தில் நேற்று மாலை 4,368 ஆக இருந்த துயர் துடைப்பு மையங்களில் 
உள்ளவர்களின் எண்ணிக்கை இரவு 10 மணி நிலவரப்படி 5,000 பேராக 
அதிகரித்துள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது.

பொந்தியானில் 501 குடும்பங்களைச் சேர்ந்த 1,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குளுவாங்கில் 358 குடும்பங்களைச் சேர்ந்த 1,239 பேரும்  மெர்சிங்கில் 258 
குடும்பங்களைச் சேர்ந்த 851 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா  திங்கியில், 169 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர், மூவாரில் 46 
குடும்பங்களைச் சேர்ந்த 206 பேர், பத்து பஹாட்டில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேர், பொந்தியானில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் வீடுகளிலிருந்து  வெளியேறி நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று அந்த செயல் குழு கூறியது.

மாநிலத்திலுள்ள  சுங்கை மூவார், சுங்கை செகாமட்  சுங்கை கஹாங், சுங்கை பொந்தியான் பெசார் ஆகிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளன.

சபாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 139 குடும்பங்களைச் சேர்ந்த 607 பேராக இருந்தது. நேற்றிரவு அந்த எண்ணிக்கை 495 குடும்பங்களைச் சேர்ந்த 1,421 பேராக அதிகரித்துள்ளது.

Pengarang :