வாடிக்கையாளர்களின் வசதிக்காக நில அலுவலகம் ஒரு கோடி வெள்ளி செலவில் சீரமைப்பு

ஷா ஆலம், ஜன 27- இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள மாநில நில மற்றும் கனிமவளத் துறை அலுவலம்  வாடிக்கையாளர்களின் வசதிக்காக 1 கோடியே 7 லட்சம் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிப்பு பணிகளுக்கு 1 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவு பிடிக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்த நிலையில் 330,000 வெள்ளி குறைவான செலவில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநில பொதுப்பணி இலாகாவின் இயக்குநர் இஞ்சினியர் லோக்மான் நாசீர் கூறினார்.

இந்த அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்கான திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு வரையப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு இதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் இடத்தை தேர்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த அலுவலகத்தின் புதுப்பிப்பு பணி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி முற்றுப் பெற்றதாக கூறிய அவர், வாடிக்கையாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையில் சிறந்த காற்றோட்ட வசதியைக் கொண்டுள்ளது என்றார்.

இந்த அலுவலகத்தை மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் திறந்து வைத்தார். 


Pengarang :