SELANGOR

பத்து கேவ்ஸ் தொகுதியில் மலிவு விற்பனை- காலை 7.00 மணி முதல் மக்கள் முற்றுகை

செலாயாங், பிப் 2- இங்குள்ள கம்போங் வீரா டாமாயில் இன்று காலை நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனையில் பொருள்கள் வாங்க 500க்கும் மேற்பட்டோர் காலை 7.00 மணிக்கே முற்றுகையிட்டனர்.

இந்த விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கிய போதிலும் தங்களுக்கான வரிசை எண்களைப் பெறுவதற்காகப் பொது மக்கள் காலை 7.00 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகச் சுங்கை துவா தொகுதிக்கான மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஏ. ரஹிம் காஸ்டி கூறினார்.

மலிவு விலையில் பொருள்களை வாங்கும் வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்பதற்காக அவர்கள் இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்தனர். இந்த விற்பனையில் அனைவருக்கும் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக வரிசை எண் முறையை அமல்படுத்தினோம் என்று அவர் சொன்னார்.

தொடக்கத்தில் வந்த 350 பேருக்கு முதல் சலுகை வழங்கினோம். மீதமிருந்த பொருள்களை மற்றவர்கள் வாங்குவதற்கு வாய்ப்பளித்தோம். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நெருங்கி வரும் போது பொருள்கள் முடிந்து விடும் நிலை ஏற்படக்கூடாது என நாங்கள் கருதினோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கோழி, முட்டை மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய மூன்று பொருள்களும் அதிகம் விற்பனையாகின. சந்தையில் இந்த பொருள்களின் விலை அதிகம் என்பதோடு எளிதிலும் கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.

பொது மக்களின் சுமையைக் குறைப்பதற்காக இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை மாநில அரசு கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு நடத்துகிறது.


Pengarang :