NATIONAL

 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு 75 பேர் கொண்ட மீட்புக் குழுவை மலேசியா அனுப்பியது

கோலாலம்பூர், பிப் 7- தென் துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு ஸ்மார்ட் எனப்படும் மலேசியச் சிறப்பு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவை மலேசியா அனுப்பியது.

ஸ்மார்ட் குழுவைச் சேர்ந்த 75 உறுப்பினர்கள் மீட்புப் பணிக்குத் தேவையான பல்வேறு உபகரணங்களுடன் நேற்றிரவு துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அந்நாட்டிற்குப் பயணமானதாகப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமது அலி அறிக்கை ஒன்றில் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்த ஒப்புதல் மற்றும் மலேசியாவின் இந்த உதவியை ஏற்றுக் கொள்வதற்கான துருக்கியின் ஒப்புதலின் அடிப்படையில் ஸ்மார்ட் குழுவினர் அங்கு அனுப்பப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் குழுவுக்கு அனைத்துலக தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசகக் குழுவின் அங்கீகாரம் கடந்த 2016ஆம் ஆண்டு கிடைத்தது. உலகின் பிற நாடுகளில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களின் போது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்குரிய தகுதி இதன் மூலம் ஸ்மார்ட் குழுவுக்குக் கிடைத்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.4 எனப் பதிவான வலுவான நில நடுக்கம் உள்ளுர் நேரப்படி நேற்று அதிகாலை 4.17 மணியளவில் தென் துருக்கியை உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்தது.


Pengarang :