SELANGOR

வட சிலாங்கூர் மக்களுக்கு அனுகூலம் தரும் தஞ்சோங் காராங் மருத்துவமனை 

கோல சிலாங்கூர், பிப் 10- தஞ்சோங் காராங் மருத்துவமனை திறக்கப்பட்டதன் வழி சிலாங்கூரின் வட பகுதி மக்கள் சிறந்த மருத்துவ சேவையைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

இவ்வாட்டார மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் இந்த மருத்துவமனையை எதிர்பார்த்து நீண்ட நாட்களாக காத்திருந்ததாக பெர்மாத்தாங் தொகுதி உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

பொதுமக்கள் குறிப்பாக, தஞ்சோங் காராங் வட்டார குடியிருப்பாளர்கள் இந்த மருத்துவமனை திறக்கப்படும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். கடந்த 2013ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை இவ்வாண்டு தொடக்கத்தில் முழுமையடைந்துள்ளது என்றார் அவர்.

இவ் வட்டாரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்தவர்களாவர். இனிமேல் அவர்கள் சிறந்த மருத்துவச் சேவையைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை பெறுவர் என எதிர் பார்க்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள பெர்மாத்தாங் தொகுதி சேவை மையத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸதாபாவுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம்  முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

சுமார் 16.1 ஹெக்டர் நிலப்பரப்பில் 26.9 கோடி வெள்ளி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 10 நிபுணத்துவ மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன.


Pengarang :