ACTIVITIES AND ADSANTARABANGSA

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தென் துருக்கிக்கு கூடாரங்கள், போர்வைகள் தேவை

சுபாங் ஜெயா, பிப் 12- வலுவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தென் துருக்கிக்கு போர்வை, வெப்பமூட்டும் சாதனம் குளிர்கால கூடாரங்கள், ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இந்த பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மலேசியாவுக்கான துருக்கி தூதர் எமிர் சலிம் யுக்சென் கூறினார்.

நாங்கள் இதர வகையான பொருள்களை பெருமளவில் பெற்றுள்ளோம். எனினும் நடப்பு சூழலைப் பொறுத்து அந்த நான்கு பொருள்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த இந்த பூகம்பத்தில் 10 நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அப்பகுதிகளில் நிலவும் அத்தியாவசியப் பொருள்களுக்கான தேவையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன என அவர் சொன்னார்.

பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு உதவுவதற்காக சுபாங் ஜெயா உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ ஏற்பாட்டில் திரட்டப்பட்ட உதவிப் பொருள்களை பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுபாங் ஜெயா வட்டார மக்கள் வழங்கிய குளிர்கால உடைகள், உணவுப் பொருள்கள், நாப்கின் உள்பட 20 டன் எடையுள்ள  பொருள்கள் இந்நிகழ்வின் போது ஒப்படைக்கப்பட்டன.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டிற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் மலேசிய அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :