SELANGOR

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எம்.பி.ஐ. வெ.500,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 14- பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கட்டமைப்பு இவ்வாண்டு ஐந்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுபாங் பெஸ்தாரி 2 தேசியப் பள்ளிக்கு 10,000 வெள்ளியும் தாமான் கிளாங் உத்தாமா தேசியப் பள்ளிக்கு 20,000 வெள்ளியும் பண்டார் ஸ்ரீ டாமன்சாரா 2 பள்ளிக்கு 10,000 வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக எம்.பி.ஐ. நிறுவன சமூகக் கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

நீர் விநியோகப் பிரச்சனையை எதிர்நோக்கிய சுபாங் பெஸ்தாரி 2 பள்ளியில் பம்ப் கருவியைச் சரி செய்வதற்குச் சமீபத்தில் நிதியுதவி வழங்கினோம் என்று அவர் தெரிவித்தார். இந்த பிரச்சனை குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கடந்த மாதம் எங்களிடம்
தெரிவித்தனர்.

தற்போது அந்த பம்ப் இயந்திரத்தைச் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அப்பள்ளியில் நிலவும் நீர் விநியோகப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் மாநிலத்திலுள்ள சுமார் 100 பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு எம்.பி.ஐ. உதவியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு வருடாந்திர மானியமாக 15 லட்சம் வெள்ளியை எம்.பி.ஐ. ஒதுக்கீடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :