NATIONAL

இன்றைய மக்களவைக் கூட்டத்தில் நாட்டின் கடன், நிலநடுக்க உதவி உள்ளிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை

கோலாலம்பூர், பிப் 14- நாட்டின் நடப்பு கடன் நிலவரம், துருக்கி மற்றும் சிரியாவுக்கான நிலநடுக்க உதவி, ஊழல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்த கேள்விகளுக்கு அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதிலளிப்பார் என்று கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் கடன் தொடர்பான கேள்வியை தைப்பிங் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் வோங் கா வோ முன்வைப்பார்.

ஆண்டுக்கு ஆண்டு கடன் தொகை அதிகரித்து வருவதற்கான காரணம் மற்றும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் குறித்து அவர் பிரதமரிடம்
கேள்வியெழுப்புவார்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மலேசியா முன்னெடுத்துள்ள திட்டங்களுக்கான செலவுகள் குறித்து கோல கங்சார் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ இஸ்கந்தார் ஜூல்கர்னாய்ன் அப்துல் காலிட் வினா தொடுப்பார்.

ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணை குறித்த விளக்கத்தைத் தாவாவ் தொகுதி ஜி.ஆர்.எஸ். உறுப்பினர் லு சூ ஃபுய் கோருவார். ஊழல விவகாரங்களில் முறையான பலன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வாயிலாக அரசாங்கம் வகுத்து வரும் வியூகங்கள் மற்றும் முக்கிய இலக்குகள் குறித்து அவர் கேள்வியை முன்வைப்பார்.

மக்களின் ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து வங்சா மாஜூ தொகுதி உறுப்பினர் எழுத்துப்பூர்வமாகக் கேள்வியை முன்வைப்பார்.


Pengarang :