ACTIVITIES AND ADSSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனைகளில்  முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

செலாயாங், பிப் 20- அதிக வாடிக்கையாளர்கள் உள்ள இடங்களில் நடைபெறும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது முட்டைகளின் எண்ணிக்கையை 500 தட்டுகளாக அதிகரிக்கும்படி சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் நிலையில் 300 தட்டு முட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படுவதாக கோம்பாக் செத்தியா தொகுதி சேவை மையத்தின் நடவடிக்கை அதிகாரி டின் யாஹ்யா கூறினார்.

முட்டை கிடைக்காதது தொடர்பில் இந்த விற்பனையில் கலந்து  கொண்ட பலர்  தம்மிடம் புகார் தெரிவித்தாக அவர் சொன்னார்.

ஆகவே. மலிவு விற்பனையின் போது குறிப்பாக ரமலான் மாதத்தின் போது முட்டைக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் அந்த உணவு மூலப் பொருளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இங்குள்ள ஸ்ரீ ஹர்மோனிஸ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று நடைபெற்ற கோம்பாக் செத்தியா தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இந்த தொகுதியில் நடைபெற்ற நான்கு மலிவு விற்பனை இயக்கங்களின் போது 2,000 குடும்பங்கள் வரை பயன்பெற்றதாக அவர் மேலும் சொன்னார்.

வரும் மார்ச் மாதத்தில் மேலும் இரு மலிவு விற்பனை நிகழ்வுகள் இந்த தொகுதியில் நடைபெறவுள்ளன. பொது மக்களுக்கு குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினருக்கு இந்த மலிவு விற்பனை பெரிதும் துணை புரியும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :