SELANGOR

டீம் சிலாங்கூர் தன்னார்வலர்களால் கிட்டத்தட்ட 400 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன

ஷா ஆலம்,  பிப் 22: கடந்த சனிக்கிழமையன்று டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் கிட்டத்தட்ட 400 கிலோ குப்பைகளைச் சேகரித்ததை அடுத்து, ஜெராம், கோலா சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ ஜெட்டியின் சுற்றுப்புறம் இப்போது புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது.

புக்கிட் மெலாவதி சமூகச் சேவை மையம் மற்றும் சுங்கை பூலோ கம்போங் பாகன் சமூக மேலாண்மை கழகம் இணைந்து நடத்திய நதியை சுத்தப்படுத்தும் இத்திட்டத்தில் மொத்தம் 50 நபர்கள் ஈடுபட்டதாக அதன் செயலகத்தின் தலைவர் ஷாஹைசல் கெமன் தெரிவித்தார்.

“ஜெட்டி மற்றும் ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக், அலுமினிய டின்கள், காகிதம் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் போன்ற ஏராளமான குப்பைகளை நாங்கள் கண்டெடுத்தோம். இத்திட்டம் இங்கு மேற்கொண்டதன் காரணம் இவ்விடம் மீனவர்கள் ஒன்றுகூடி வாழ்வாதாரம் தேடும் இடமாகவும், உள்ளூர் சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான இடமாகவும் உள்ளது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஜெட்டிக்கு அருகில் உள்ள ஒரு பொது மண்டபத்தில் “பிரவுனி“ தயாரிக்கும் பட்டறை மற்றும் சுகாதாரப் பரிசோதனையையும் அவரது தரப்பு ஏற்பாடு செய்ததாக ஷாஹைசல் தெரிவித்தார்.

ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE), பந்துவான் கெயிடுபான் செஜாத்ரா சிலாங்கூர் (பிங்காஸ்), யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா), இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் மற்றும் யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யவாஸ்) ஆகியத் திட்டங்களுக்கான பதிவு மற்றும் சரிபார்ப்பு கவுண்டர்களும் இங்கு திறக்கப்பட்டன,“ என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், டீம் சிலாங்கூர் எதிர்காலத்தில் மற்ற இடங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது என்றார். தற்போது, துப்புரவு பணியில் கவனம் செலுத்த வேண்டிய இடங்களை கண்டறிந்து, ஆலோசித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.


Pengarang :