NATIONAL

261வது ஆட்சியாளர்கள் மாநாட்டிற்குச் சிலாங்கூர் சுல்தான் தலைமையேற்றார்

கோலாலம்பூர், பிப் 22- இஸ்தானா  நெகாராவில் இன்று தொடங்கிய 261வது ஆட்சியாளர்கள் மாநாட்டிற்கு மேன்மை தங்கியச் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தலைமை தாங்கினார்.

ஆகக் கடைசியாகக் கடந்தாண்டு நவம்பர் மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நெகிரி செம்பிலான் யாங்டி பெர்த்துவான் பெசார் துவாங்கு முகரிஸ் இப்னி அல்மார்ஹும் துவாங் முனாவிர் தலைமை தாங்கினார்.

இந்த மாநாடு காலை 10.45 மணிக்குத் தொடங்கப்படுவதற்கு முன்னர் டத்தாரான் உத்தாமாவில் நடைபெற்ற அரச மலாய் இராணுவத்தின் முதலாவது பட்டாளத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் 103 வீரர்கள் அடங்கிய குழுவினர் வழங்கிய மரியாதை அணிவகுப்பைச் சுல்தான் ஷராபுடின் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாண்டிற்கான ஆட்சியாளர்கள் மாநாட்டை தொடக்கி வைப்பதன் அடையாளமாக அரண்மனை வளாகத்தில் சிப்பாங் மரக்கன்றை அவர் நட்டார்.

இந்த மரம் நடும் சடங்கை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா பார்வையிட்டார்.

இந்த ஆட்சியாளர்கள் மாநாட்டில் அனைத்து மாநில மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.


Pengarang :