NATIONAL

பாதுகாவலரைத் தாக்கிய உணவு விநியோகம் செய்யும் சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர்,  பிப் 27: பிப்ரவரி 24 அன்று காஜாங்கின் சுங்கை ரமால் லூவார் அருகே உள்ள தாமான் புக்கிட் மெரிங்கின் கட்டுப்பாட்டுச் சாவடியில் பணியில் இருந்த பாதுகாவலரை உதைத்த, உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளின் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஒருவர் தாமான் வளாகத்தின் உள் நுழைய அனுமதி கேட்டுள்ளார்.

காஜாங் மாவட்ட காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் முகமட் சைட் ஹாசன் கூறுகையில், உணவு விநியோகம் செய்பவர் உள்ளே செல்ல அனுமதிக்காத பாதுகாவலர் மீது அதிருப்தி அடைந்ததால் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

“தாமான் புக்கிட் மெரிங்கினில் உள்ள மூன்றாம் எண் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று அச்சந்தேக நபர் பாதுகாவலரிடம் கேட்டுள்ளார். ஆனால் நேபாள நாட்டைச் சேர்ந்த அப்பாதுகாவலர் குறிப்பிட்ட வீடு காலியாக இருப்பதாகவும், ஆட்கள் இல்லை என்றும் கூறி சந்தேக நபரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

“கோபமடைந்த சந்தேக நபர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பாதுகாவலரை வயிற்றில் உதைத்து உள்ளார்,” என்று கூறப்படுகிறது..

இந்த சம்பவம் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் டாஷ்போர்டு கேமராவில் (டாஷ் கேம்) பதிவாகியுள்ளதாக முகமட் சைட் கூறினார்.

பாதுகாவலர் இந்த சம்பவத்தை தனது மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார். பின்னர் அன்றிரவு காவல்துறையில் இச்சம்பவம் தொடர்பில் புகார் செய்ய முன் வந்தார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை அல்லது வழக்கின் விசாரணை அதிகாரியான சார்ஜென்ட் அஹ்மத் அஃபிஃபி அஹ்மட் ஹுமைடியை 019-7142486 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குற்றவியல் சட்டம் பிரிவு 323 மற்றும் 506 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.


Pengarang :