SELANGOR

உலு சிலாங்கூரில் 405 தாவாஸ் உறுப்பினர்களுக்குப் புத்தகப் பை, எழுது பொருட்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 6- சிலாங்கூர் தாவாஸ் எனப்படும் தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் அமைப்பு உலு சிலாங்கூர் மாவட்டத்திலுள்ள 405 உறுப்பினர்களுக்குப் புத்தகப் பை மற்றும் எழுது பொருள்களை அன்பளிப்பாக வழங்கியது.

இவ்வாண்டில் முதலாம் வகுப்புச் செல்லும் 2016 ஆம் ஆண்டில் பிறந்த இம்மாணவர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிக்குள்  தொகுதி சேவை மையத்தில் இந்த உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர் என்று கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

உலு சிலாங்கூர் மாவட்டத்திலுள்ள 405 மாணவர்கள் இந்த உதவிப் பொருட்களைப் பெற்றனர். அழகிய வடிவிலான புத்தகப் பைகளைக் கண்டு அவர்கள்  பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர் என்று லீ கீ ஹியோங் குறிப்பிட்டார்.

அந்த புத்தகப் பையில் சிறிய பை ஒன்றும்  மற்றும் எழுது பொருட்களும் இருப்பதை நான் காட்டிய போது அம்மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் பிறந்த 42,634 மாணவர்கள் இவ்வாண்டு கல்வித் தவணை தொடங்கும் போது இந்த பள்ளி உபகரணங்களைப் பெறுவார்கள் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார்.

யாவாஸ் எனப்படும் யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் அற வாரியத்தின் கீழ் இந்த தாவாஸ் அமைப்பு செயல்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில நிலையிலான மெர்டேக்கா கொண்டாட்டத்தின் போது இந்த அறவாரியம் தோற்றுவிக்கப்பட்டது.


Pengarang :