NATIONAL

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மெர்சிங், மார்ச் 7- இங்குள்ள ஜாலான் நிதார் உத்தாமாவில் நேற்று காலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படம் புரோடுவா மைவி ரக காரிலிருந்து பெண்மணி ஒருவரின் சடலம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மாலை 6.55 மணியளவில் அக்கார் கண்டு பிடிக்கப்பட்ட வேளையில் இரவு 10.19 மணியளவில் அதனுள் பெண்மணியின் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஜொகூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இடைக்கால இயக்குநர் உதவி ஆணையர் முகமது ரிசால் புவாங் கூறினார்.

மரங்களுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்த அந்த சாம்பல் நிறக் காரை 40 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தாங்கள் வெளியே கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.

அந்த காரில் இருந்த அப்பெண்ணின் சடலத்தை இரவு 10.22 மணியளவில் மீட்டு மேல் நடவடிக்கைக்காகக் காவல் துறையிடம் தாங்கள் ஒப்படைத்ததாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அந்தக் கார் காணாமல் போன இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் கிடந்ததை நீர் மீட்புப் குழுவினர் (பி.பி.டி.ஏ.) கண்டு பிடித்தனர்.

இதனிடையே, நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்ட அச்சடலம் காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்ட மைவி ரகக்காரின் ஓட்டுநருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மெர்சிங் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரசாக் அப்துல்லாக சானி கூறினார்.


Pengarang :