SELANGOR

சுங்கை துவா தொகுதியில் மார்ச் மாதம் முழுவதும் வாரம் இரு முறை மலிவு விற்பனை

கோம்பாக், மார்ச் 7- சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் இம்மாதம் முழுவதும் வாரம் இரு முறை மாநில அரசின் மலிவு விற்பனை நடைபெறவுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினைத் தொகுதி மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாகத் தொகுதி சமூகச் சேவை மையத்தின் அதிகாரி பி.சண்முகம் கூறினார்.

இவ்வாரத்தில் அதாவது மார்ச் 8ஆம் தேதி தொடங்கி இதுவரை மூன்று முறை இந்த மலிவு விற்பனையை இத்தொகுதியில் நடத்தியுள்ளோம். ரமலான் மாதத்திற்கான மலிவு விற்பனையைத் தொகுதி சேவை மையம் தற்போது ஒருங்கிணைத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது சிலாங்கூர்கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு கோழி மற்றும் முட்டை போன்ற பொருள்கள் விரைவாக விற்றுத் தீர்ந்ததாகச் சிலாங்கூர் ஃபுரூட் வேலி துணை நிர்வாகி நேர்ஃபைசுல் ஹம்சா கூறினார்.

காலை 8.00 மணி முதல் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். கோழி மற்றும் முட்டைகளைப் பொட்டலமிடும் பணியை முடித்துக் கொண்டு காலை 9.50 மணியளவில் விற்பனைத் தொடங்கினோம். பிற்பகல் 12.30 மணிக்கெல்லாம் அனைத்துப்
பொருள்களும் விற்றுத் தீர்ந்தன என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனையில் முழு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :