SELANGOR

சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பணி சீராக நடைபெறுகிறது- சில திட்டங்கள் விரைவில் தொடங்கும்

சபாங் பெர்ணம், மார்ச் 20- சபாக் பெர்ணம் வட்டார மேம்பாட்டுத் திட்டம் (சாப்டா) சீரான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு சில திட்டங்கள் அங்கீகாரத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சங்காட் மெந்திரியில் உள்ள சிலாங்கூர் விவேக வேளாண் பூங்காவில் (எஸ்.எஸ்.ஏ.பி.) மேற்கொள்ளப்படவிருக்கும் நவீன விவசாயத் திட்டமும் அதில் அடங்கும் என்று அடிப்படை மற்றும் பொது வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷம் கூறினார்.

சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறையின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, ஹெய் ரிசோர்ட் திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது இறுதிக் கட்டத்தில் உள்ளது. சுங்கை லாங் விவசாய மற்றும் கடல்சார் உணவுப் பொருள் திட்டத்திற்கு திட்டமிடல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தை நாம் எதிர்கொண் போதிலும் சாப்டா திட்டம் சீரான முறையில் மேம்பாடு கண்டு வருகிறது. அனைத்துத் திட்டங்களும் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற சபாக் பெர்ணம் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் இந்த வட்டாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்பதோடு பொருளாதார வளர்ச்சியையும் துரிதப்படுத்த இயலும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :