SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை மே மாதம் முடிவுக்கு வருகிறது- புதிய திட்ட அமலாக்கம் குறித்து பரிசீலனை

சபாக் பெரணம், மார்ச் 20 – அதிகரித்து வரும் பொருள் விலை சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக  மக்களுக்கு உதவக்கூடிய  புதிய வழிமுறையை மாநில அரசு ஆராயும்.

வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான  ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத்  திட்டத்திற்கு மாற்றத் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நவீன விவசாயம் மற்றும் அடிப்படை உணவு தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த மலிவு விலைத் திட்டத்தை தொடர முடியாது.  ஆனால் சில சூழ்நிலைகளில் மானியங்கள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் பொது மக்களுக்குச் சிரமம் ஏற்படும் என்று அவர் சொன்னார். குறுகிய காலத்திற்கு மட்டுமே நாம் மானியங்களை வழங்க முடியும். எனினும், கோழி விலையைக் குறைப்பது போன்ற நீண்டகால அடிப்படையிலான திட்டம் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

கோழியின் விலையும் குறைக்க வேண்டுமானால்  கோழி தீவனத்தின் விலையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நான் (விவசாயத்துறை) அமைச்சரிடம் நான் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளேன் என்று இஷாம் ஹாஷிம் கூறினார்.

சபாக் பெர்னாம் மாவட்ட அளவிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வை  இங்குள்ள சுங்கை பெசாரில் உள்ள பாகான் தெராப்பில் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மெனு ரஹ்மா மலிவு விலை உணவு விநியோகம் போன்ற  திட்டத்தை அமல் படுத்துவதற்குச்  கூட்டரசு சந்தை வாரியம் (ஃபாமா) மற்றும் வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் (கோஹிஜ்ரா)  கூட்டுறவுச் சங்கம் ஆகிய தரப்பினருடன்  ஒத்துழைக்க தமது தரப்பு உத்தேசித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :