பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் வெ.370,000 நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் சீரமைப்பு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 24– இங்குள்ள தாமான் எஸ்.எஸ்.25/9 விளையாட்டு மைதானத்தின் நடைபாதை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் சீரமைப்புச் செய்யும் பணி இம்மாத தொடக்கத்தில் முற்றுப்பெற்றதைத் தொடர்ந்து அவ்வட்டார மக்கள் ஓய்வெடுப்பதற்கும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கும் ஏற்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்துவதற்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் 370,000 வெள்ளியைச் செலவிட்டதாக பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்த சீரமைப்புத் திட்டத்தில் ஜோகிங் எனப்படும் மெதுவோட்டத் தடத்தை தரம் உயர்த்துவது, சிறார் விளையாட்டு மைதானத்தின் ரப்பர் தரை விரிப்புகளை மாற்றவது , இருக்கைகளை அதிகரிப்பது, விளையாட்டு உபகரணங்கள் சீர் செய்வது மரங்கள் மற்றும் புற்களை வெட்டிச் சுத்தம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.

இவ்வட்டார மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த இந்த விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்வதில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மாநகர் மன்ற உறுப்பினர்கள், மாநகர் மன்றம் சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கிய தாக அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஒப்புதலுக்கு பின்னர் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரமைப்புத் திட்டம் இம்மாத தொடக்கத்தில் முழுமை பெற்றது என அவர் மேலும்  சொன்னார்.


Pengarang :