SELANGOR

ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கில் 35 மாணவர்கள் பங்கேற்றனர்

ஷா ஆலம், மார்ச் 28- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, ஸ்ரீ மகா மாரியம்மன்
ஆலயத்தில் நேற்று நடைபெற அரசாங்க உயர்கல்விக் கூடங்களுக்கு
விண்ணப்பம் செய்வது தொடர்பான வழிகாட்டி கருத்தரங்கில் 35
மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., டிப்ளோமா, மெட்ரிகுலேஷன் முடித்த
மாணவர்கள் யு.பி.யு. ஆன்லைன் எனப்படும் இணையம் வழி மாணவர்
சேர்க்கை விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது தொடர்பான விளக்கங்கள்
இந்த வழிகாட்டிக் கருத்தரங்கில் வழங்கப்பட்டன.

உயர்கல்விக் கூடங்களுக்கு விண்ணப்பம் செய்வதில் மாணவர்கள்
எதிர்நோக்கும் தடுமாற்றத்தைக் களையும் நோக்கில் “அரசாங்க
உயர்கல்விக்கூடங்களே எனது முதல் தேர்வு“ எனும் இந்த வழிகாட்டிக்
கருத்தரங்குகளைக் கியூமிக் எனப்படும் மலாயா பல்கலைக்கழக
பட்டதாரிகள் நடவடிக்கை குழு நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது.

ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற இந்த வழிகாட்டிக் கருத்தரங்கிற்கு மாணவர்கள்
மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக இதன் திட்ட
ஒருங்கிணைப்பாளர் எம்.சத்திஸ்குமார் கூறினார்.

இவ்வாண்டிற்கான இந்த முதல் கட்ட வழிகாட்டிக் கருத்தரங்கு 15
இடங்களில் நேரடியாக நடதப்பட்ட வேளையில் இயங்கலை வாயிலாக 25
முறை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார். கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம்
தேதி தொடங்கி நேற்று வரை நடத்தப்பட்ட இந்த கருத்தரங்குகள்
வாயிலாக சுமார் 2,000 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர் என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்வை முடித்து உயர்க்கல்விக் கூடங்களில் மேல்கல்வியை தொடர
விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை யு.பி.யு ஆன்லைன்
எனப்படும் இணையம் வழி எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து

இத்துறையில் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் மாணவர்களுக்கு
விளக்கம் தருவதாக அவர் சொன்னார்.

இந்த கருத்தரங்கில் மாணவர்களோடு அவர்களின் பெற்றோர்களும் கலந்து
கொண்டது பிள்ளைகளின் எதிர்காலம் மீது அவர்களுக்கு உள்ள
அக்கறையைப் புலப்படுத்துவதாக உள்ளது என அவர் மேலும்
குறிப்பிட்டார்.


Pengarang :