ANTARABANGSA

மார்ச் 14 வரை 995,396 அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி – நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 29- இம்மாதம் 14ஆம் தேதி வரையிலான
காலக்கட்டத்தில் 995,396 அந்நியத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடுகள்
அங்கீகரிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அந்த அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி தொகையில் 84.7
விழுக்காட்டினை முதலாளிகள் செலுத்தி விட்டதாக மனிதவள
துணையமைச்சர் முஸ்தாபா சக்முட் கூறினார்.

லெவி கட்டணம் செலுத்தப்பட்ட 18 மாதங்களில் அந்நியத்
தொழிலாளர்களைத் தருவிக்க முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்படும்
என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர்
குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பில் நடைபெற்று வரும்
பேச்சுவார்த்தை, அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் சாத்தியம் உள்ள
நாடுகள், இந்நாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ள தொழிலாளர்கள்
எண்ணிக்கை மற்றும் நாட்டின் ஆள்பலப் பற்றாக்குறையைப்
போக்குவதற்குத் தேவைப்படும கால அவகாசம் குறித்து பத்து கவான்
உறுப்பினர் சௌ கூன் இயோ கேள்வியெழுப்பியிருந்தார்.

மிக அதிகமாக உற்பத்தித் துறைக்கும் அதற்கு அடுத்த நிலையில்
கட்டுமானம், சேவைத் துறை, தோட்டத் தொழில், விவசாயம், சுங்கம்
ஆகிய துறைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள்
அங்கீகரிக்கப்பட்டன என்று முஸதாபா தனது பதிலில் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பில் ஒத்துழைப்பை
வலுப்படுத்துவதற்காகப் பத்து நாடுகளுடன் மலேசியா புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

எனினும், வங்காளதேசம், சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான்,
வியட்னாம், நேப்பாளம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்கள் மட்டுமே இன்னும் உயிர்ப்புடன் உள்ள வேளையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுடனான ஒப்பந்தம் காலாவதியாகவிட்டது என்றார் அவர்.


Pengarang :