NATIONAL

ஒற்றுமை அரசு ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும்: ஹாடி அவாங்கும் மகாதீரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் -டாக்டர் குணராஜ்

கிள்ளான், மார்ச் 29:பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.

மாட்சிமைக்குரிய மாமன்னர் தலைமையிலான ஆட்சியாளர் மன்றமும் மக்கள் மன்றமும் ஒருசேர உருவாக்கிய அரசு, தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஆற்ற வேண்டும்.

நான்கு ஆண்டுகளில் நான்கு பிரதமர்களைக் கண்டு, அரசியல் நிலைத்தன்மையை இழந்த நாடு, இப்பொழுதுதான் மீட்சிப் பாதையில் பயணிக்கிறது. அதைக் கெடுக்கும் விதமாக, பிரதமரையும் புதிய அரசாங்கத்தையும் மாற்ற வேண்டும் என்ற பாணியில் பேசிவரும் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங், புத்ரா கட்சி ஆலோசகர் துன் மகாதீர் இருவரும் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒருவர் புதிதாக பணியில் சேர்ந்தால், சம்பந்தப்பட்ட பணியாளர் தன்னைத் தயார்ப்படுத்தவும் ஆக்ககரமாக செயல்படவும் சிறிதுகாலம் தேவைப்படும். அப்பொழுதுதான், அவரின் ஆற்றல் குறித்து அவதானிக்க முடியும்.

அதைப்போல, நாடு பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டிருந்த நேரத்தில் நாட்டில் முதல் முறையாக புதிய முறையில் உருவான  ஒற்றுமை அரசுக்கும் அதை வழிநடத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் உரிய அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஒற்றுமை அரசு குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் எடைபோட முடியும். ஆனால், ஆட்சி அமைந்த மூன்று மாதங்கள்கூட ஆகாத நிலையில், புதிய அரசு கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் பேசினார்.

இப்பொழுது, மொகிடினை மாற்றியதைப் போல அன்வாரையும் மாற்ற வேண்டும் என்று அடுத்த ஒரு மாதத்தில் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு அரசியல் நிலைத்தன்மையை தக்கவைக்க வேண்டும்; நாடு எதிர்நோக்கியுள்ள 1.3ட்ரில்லியன் கடன் சுமை குறைக்கப்பட வேண்டும்; மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்; தற்போதைய நோன்பு மாதத்தில் பொருள் விலை ஏற்றத்தால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமம் தணிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இந்த இரு தலைவர்களுக்கும் இருந்தால், இப்படி புதிய பிரதமருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் எதிராக பேச மாட்டார்கள்.

குறிப்பாக, நாட்டின் நலம் கருதி மாட்சிமைக்குரிய மாமன்னர் தலைமையில் ஆட்சியாளர்கள் எடுத்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த அரசுக்கு கெடுதலைப் புரிய நினைக்கும் இவர்களை, மக்கள் அடையாளம் காண வேண்டும் என்றும் பிகேஆர் கோத்தா ராஜா தொகுதிப் பொறுப்பாளருமான டாக்டர் குணராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Pengarang :